பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்
பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் என மாங்காடு ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
கிராமசபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் 74-வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
வருடத்திற்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு அரசு வழி வகுத்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அதன் செலவினங்கள் குறித்தும் கடைக்கோடி மக்களும் அறிந்து கொள்வதற்காகத்தான். மேலும் ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், பணிகளில் உள்ள குறைகளை பொதுமக்கள் இந்த கூட்டத்தில் வெளிப்படுத்த முடியும். கிராம ஊராட்சிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை உடனடியாக வழங்கப்படுகிறது. ஏனையவர்களுக்கும் அடுத்தடுத்து வழங்கப்படுகின்றன.
பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்
குறிப்பாக நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதிலும் முக்கியத்துவம் அளிக்கிறோம். முறையாக நீர் வழித்தடங்களை தூர் வாருவதன் காரணமாக பனப்பாக்கம் ஏறி கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நிரம்பியுள்ளது. நாம் அனைவரும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் நீர் புகுதலை தடுக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. மேலும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. இதனால் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகத்தான் முதல்-அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
கிராமங்களில் தூய்மை பணிகள், குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு ஆகிய பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை மக்கள் கவனித்து இது போன்ற கிராம சபை கூட்டங்களில் கேள்வி எழுப்ப வேண்டும். அப்போதுதான் பணிகள் முறையாக நடக்கும். அதற்காகத்தான் இது போன்ற கூட்டங்களை நடத்திட அரசு வழி வகுத்துள்ளது.
மாநிலத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவில் பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். தற்போது 186 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆணை கிடைத்துள்ளது. மேலும் அதிக அளவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகமானது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் வினோத்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன், ஒன்றியக் குழு உறுப்பினர் சரண்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.