வேளாண் உற்பத்தி ஆணையத்தின் உத்தரவுக்கு காத்திருப்பு
கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்குவதற்கு வேளாண் உற்பத்தி ஆணையத்தின் உத்தரவுக்கு காத்திருக்கின்றனர். அதுவரை விவசாயிகள் கொடுக்கும் ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்குவதற்கு வேளாண் உற்பத்தி ஆணையத்தின் உத்தரவுக்கு காத்திருக்கின்றனர். அதுவரை விவசாயிகள் கொடுக்கும் ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொள்முதல் தொடங்கவில்லை
தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து செஞ்சேரிமலை, நெகமம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அரசு அறிவித்த கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதியும் நிறைவடைந்தது.
அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் செயல்படாததால் வெளி மார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை சரிந்தது. இதனால் விவசாயிகள் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தனர். இதை ஏற்று மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதலை அடுத்த மாதம் 31-ந்தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டது. ஆனால் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட கொள்முதல் மையங்களில் நேற்று கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கவில்லை. இதனால் கொப்பரை தேங்காயை கொண்டு சென்ற விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆவணங்கள் சரிபார்ப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிப்பு செய்து உள்ளதாக தகவல் வந்தது. இதனால் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தோம். ஆனால் அதிகாரிகள் இன்னும் வேளாண் உற்பத்தி ஆணையத்திடம் இருந்து உத்தரவு வரவில்லை என்று கூறுகின்றனர். கொள்முதல் மையம் திறக்கப்பட்டால் தான் வெளிமார்க்கெட்டிலும் கொப்பரை தேங்காய் விலை உயரும். மேலும் தாமதமாக நீட்டிப்பு செய்ததில், 2 மாதங்களில் ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. எனவே கொப்பரை தேங்காய் கொள்முதலை உடனடியாக தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஒழுங்குறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டித்து அறிவிப்பு வந்து உள்ளது. விடுமுறை நாட்களுக்கு பிறகு இன்று (நேற்று) தான் அலுவலகம் செயல்படுகிறது. இதனால் இன்னும் வேளாண் உற்பத்தி ஆணையத்திடம் இருந்து உத்தரவு வரவில்லை. இதற்கிடையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகளிடம் இருந்து ஆவணங்களை வாங்கி சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உத்தரவு வந்ததும் சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்படும் என்றனர்.