மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
தளி,
செட்டில்மெண்ட் வரை சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் 3 நாட்களாக நடத்தி வந்த காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கலெக்டர் தலைைமயில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
மலைவாழ் மக்கள் குடியிருப்பு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான குடிநீர், பாதை, வாகனவசதி, மின்சாரம், வீடு என அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து தரப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து தரைப்பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கு பாதை, ஆறுகளை கடந்து செல்ல பாலங்கள் கட்ட தடையின்மை சான்று வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்து தரக் வேண்டும் என்பது உள்பட கடந்த 3 நாட்களாக உடுமலை வனச்சரக அலுவலகத்தின் முன்பு மலைவாழ் மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மலைவாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக கைக்குழந்தையுடன் போராட்ட களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு இரவு பகலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் திருமூர்த்தி மலை ரோடு முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை சாலை அமைத்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான வன உரிமை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வன உரிமைச் சட்டப்படி திருமூர்த்திமலை ரோடு முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை சாலை அமைக்க 5.37 கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதி அளித்து தீர்மானம் வழங்கப்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பேச்சு வார்த்தையில் உரிமையை வென்றெடுத்து உடுமலைக்கு வருகை தந்த நிர்வாகிகளுக்கு பட்டாசு வெடித்து பாரம்பரிய இசை கருவிகள் முழங்க வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இனிப்புகள் வழங்கியும் மலைவாழ் மக்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.பாதை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் மாவடப்பு, குருமலை, மேல் குருமலை, குலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அவசரகால உதவிகளை பெறுவதற்கு விரைந்து வர இயலும் என்பதால் நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.போராட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பரமசிவம், எஸ். ஆர்.மதுசூதனன், செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிறைவுரை ஆற்றினார்கள்.