காசநோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு-கலெக்டர் கேடயங்களை வழங்கினார்

நாமக்கல்:
காசநோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்களுக்கு கேடயங்களை வழங்கி கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார்.
பாராட்டு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக காசநோய் தினத்தையொட்டி காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி, காசநோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து காசநோய் விளக்க கையேடு மற்றும் குறும்படத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டார். மேலும் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறப்பு சதவிகிதம் குறைவு
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ராஜ்மோகன், துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பிரபாகரன், துணை இயக்குனர் (தொழுநோய்) ஜெயந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காசநோயில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 82 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும், நடப்பாண்டில் 90 சதவீதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இறப்பு சதவிகிதமும் குறைந்து இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.






