சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்களுக்கு விருதுகள்31-ந்தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம்


சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்களுக்கு விருதுகள்31-ந்தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் வருகிற 31-ந்தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியதற்காக முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் 1 லட்சம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியனவும் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் வழங்கப்படவுள்ளது.

எனவே இந்த விருதை பெறுவதற்கு சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். 2022 ஏப்ரல் மாதம் 1-ந்தேதி 15 வயது நிரம்பியவராகவும், 31-3-2023 அன்றுடன் 35 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

சமுதாய நலன்

விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்று இணைக்கவேண்டும். அதோடு சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி, அந்த தொண்டுகள் கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருக்க வேண்டும்.

உள்ளுர் மக்களிடம் நன்மதிப்பு மிக்கவராகவும் இருக்கவேண்டும். அதோடு, 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

31-ந்தேதிக்குள்...

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை வருகிற 31-ந்தேதி மாலை 4 மணிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்-72990 05768 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story