ஈரோட்டில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோட்டில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகள் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு வழியாக சென்று காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நிறைவடைந்தது.
முன்னதாக அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி, உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி வாசகம் அடங்கிய பதாகையில் கையொப்பமிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். மேலும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஒட்டுவில்லை அடங்கிய ஆட்டோ பயணத்தினையும் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தொடங்கி வைத்தார். பின்னர் எச்.ஐ.வி, எய்ட்ஸ், காசநோய், தன்னார்வ ரத்த தானம் ஆகிய தலைப்புகளில் சுவரொட்டி உருவாக்குதல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பயிற்சி கலெக்டர் பொன்மணி, துணை இயக்குனர்கள் சோமசுந்தரம், ரவீந்திரன், கனகராஜ் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள்.