விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு
கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளை வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ விபத்துகள் ஏற்படும் முறைகள் மற்றும் அதை அணைக்கும் முறைகள் குறித்து விளக்கி செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். மேலும் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
நோட்டீஸ்கள்
இதேபோல் கரூர் அரசு கலைக்கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) சர்புதீன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சரவெடி பட்டாசுகள், கொழுந்துவிட்டு எரியும் ராக்கெட்டுகள் இவைகளை கையில் பிடித்து கொண்டு வெடிக்க கூடாது. குழந்தைகளை அருகில் அமரவைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் ஆடைகளை அணிந்து கொள்வதை தவிர்த்து விட வேண்டும். காலணிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். குடிசை பகுதிகளில் ராக்கெட் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கி மாணவ, மாணவிகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.