விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
நொய்யல் பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூர், திருக்காடுதுறை, மண்மங்கலம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி ஒத்திகை பயிற்சி செய்து காட்டினார்கள்.அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலையில் வெடிக்க வேண்டும்.
ஆலோசனைகள்
பட்டாசுகளை மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வானங்கள் பயன்படுத்தும் போது இருக்குமான பருத்தியிலான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் படுத்து உருள வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ந்த தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருங்கள்.
அதேபோல் பட்டாசுகளை குடிசை பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பகுதிகளான பெட்ரோல் பங்க், வைக்கோல் போர் போன்ற இடங்களில் வெடிக்கக் கூடாது. மொட்டை மாடியில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை சேமித்து எரிக்கக் கூடாது பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.