குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோவை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் நிவேதா, வடக்கு ஒன்றிய விரிவாக்க அலுவலர் செல்வி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு அவசர உதவி எண்களைப் பற்றியும், எந்தெந்த சூழ்நிலையில் எந்தவிதமான எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உதவி எண்களில் அழைக்கலாம்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் யாராவது தங்களை தவறான நோக்கில் தொட்டால் அதுகுறித்து பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு வரும் போது யாராவது ஏதாவது சாப்பிட கொடுத்தால் வாங்க கூடாது. அவர்கள் மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பெண்கள் உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, முதியோர் உதவி எண் 14567, மாநில ஆலோசனை உதவி மையம் 14417 ஆகிய எண்களில் அவசர காலங்களில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.