வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு


வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
x

பொள்ளாச்சியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட்

சென்னை அருகே மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி, அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சியில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் கொண்ட ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் தணிகவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமைக்குரியது. இந்த போட்டியை நகரம் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. மாணவ-மாணவிகள் தினமும் பள்ளிக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக பள்ளி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இதேபோன்று ஆட்டோக்கள், பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story