வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 5 எக்ேடரில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சான் கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விளை பொருட்களில் எஞ்சிய நஞ்சு அதிக அளவில் தங்கி, உட்கொள்பவர்களுக்கு பலவிதமான உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. மேலும் விவசாய நிலங்களும், சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிப்படைகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டு இயற்கையில் கிடைக்கும் வேப்பங்கொட்டையை பயன்படுத்தி வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்து பயன்படுத்தலாம். பின்வரும் முறைகளை பயன்படுத்தி வேப்பங்கொட்டை கரைசலை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:- நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள்-5 கிலோ, தண்ணீர் (நல்ல தரமான) 100 லிட்டர், காதி சோப்பு -200 கிராம், மெல்லிய வகை துணி-வடிகட்டுவதற்காக.
செய்முறை:- 5 கிலோ அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைத்து, அரைத்த கொட்டைகளை 10 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியை கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாக கலக்கி விட வேண்டும். 2 அடுக்கு மெல்லிய துணியை கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவீதம் காதி சோப்பு சேர்க்க வேண்டும். முதலில் சோப்பை பசையைப் போல் மாற்றி, பின்பு கரைசலுடன் கலக்கவும். பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.
குறிப்பு:- வேப்பங்கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுப்பட நிழலில் உலர்த்த வேண்டும். 8 மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். வெயில் சாயும் நேரத்தில் மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.