குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

காஞ்சிபுரம்

புத்தாக்க பயிற்சி

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூகரீதியான வலிமையான அடித்தளம் அமைக்க 0-6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலை மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தவும், சிசு இறப்பு விகிதம், நோயின் தன்மையின் விகிதம் ஊட்டச்சத்து குறைவு மற்றும் முன்பருவ பள்ளி கல்வியில் இருந்து இடை நிற்றல் ஆகியவற்றை குறைப்பதற்காகவும், குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் கல்வி மூலமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான தேவைகளை அறிந்து செயல்பட தக்க வகையில் தாய்மார்களின் திறனை மேம்படுத்தவும் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

குழந்தைகள் மையங்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 940 குழந்தைகள் மையங்களில் 43 ஆயிரத்து 537 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 960 குழந்தைகள் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 1,546 குழந்தைகள் மிதமான வளர்ச்சி குறைபாடுடனும், மற்றும் 442 குழந்தைகள் கடுமையான வளர்ச்சி குறைபாடுடன் காணப்படுகிறார்கள். ஆக மொத்தம் 1,988 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள்.

தங்களது பகுதியில் உள்ள குழந்தைகள் மையங்களில் நடைபெறும் கிராம சுகாதார ஊட்டச்சத்து தினங்களில் பங்குகொண்டு ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து வழங்கி ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான பஞ்சாயத்து என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும் குழந்தைகள் மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் சமுதாய வீட்டு தோட்டம் அமைத்து அதில் கிடைக்கும் சத்தான காய்கறிகள், பழங்கள் குழந்தைகளுக்கு வழங்கிட உதவி புரியவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியமானதாகும்.

மேலும் எடை குறைவு, வளர்ச்சியின்மை குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கிட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story