பெரம்பலூரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை தொடக்கம்


பெரம்பலூரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்  நாளை தொடக்கம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூர் பாலக்கரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பாலக்கரையில் பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்படவுள்ள புகைப்பட கண்காட்சி-விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிாியா தலைமை தாங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 22-ந்தேதி வரை ஆகிய 10 நாட்கள் பாலக்கரை அருகே நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், பயனாளிகளின் புகைப்படங்கள் இடம் பெறும் வகையில் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படவுள்ளது. மேலும் சுற்றுலாத்துறையுடன் மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு "தெருவோர உணவகம்" அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய உணவு திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடத்தப்படவுள்ளது. புகைப்பட கண்காட்சி-விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், என்றார்.


Next Story