வேளாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


வேளாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x

மண்டபம் யூனியனில் வேளாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மண்டபம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்து கூறும் வகையில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள என் மனம் கொண்டான், கோரவள்ளி, வெள்ளரி ஓடை, தாமரைக்குளம், உச்சிப்புளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலமாக வேளாண் துறையில் செயல்படு்த்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள், விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள், உழவன் செயலி பதிவிறக்கம் செய்வது மற்றும் உழவன் செயலியின் பயன்பாடு, கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கான ஆவண விவரங்கள் போன்றவை குறித்து விளக்கி கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன், ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பது மற்றும் பிற காரணங்களினால் நிதி பெறப்படாமல் இருப்பதை சரி செய்யும் வகையில் உச்சிப்புளி வேளாண் ஒருங்கிணைந்த விரிவாக்க மையத்தில் இன்று (புதன்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

1 More update

Related Tags :
Next Story