தூய்மைப்பணிகள் விழிப்புணர்வு முகாம்


தூய்மைப்பணிகள் விழிப்புணர்வு முகாம்
x

தர்மபுரி நகரில் தூய்மைப்பணிகள் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

தர்மபுரி நகரில் தூய்மைப்பணிகள் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி நகராட்சியின் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என் நகரம், என் பெருமை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன. தர்மபுரி நகராட்சி பஸ் நிலையத்தில் இந்த மக்கள் இயக்கத்தின் மூலம் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தூய்மைப்பணிகள் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி நகரில் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் அதனை மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான நகரை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

குப்பை தொட்டி

இதைத் தொடர்ந்து தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு குப்பை தொட்டிகளையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் தலைமையில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணசரண், சுசீந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், செந்தில்வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story