பாறு கழுகுகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
ஊட்டியில் பாறு கழுகுகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
ஊட்டி
பாறு கழுகுகள் செழித்து வாழ பாதுகாப்பான சூழலை உருவாக்க வலியுறுத்தி அருளகம் அமைப்பு மூலம் பொதுமக்களுக்கு தெருமுனை பிரசாரம் வாயிலாக சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஊர்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் தெப்பக்காடு, ஆனைப்பாடி, ஆனைக்கட்டி, சிறியூர், பொக்காபுரம், மாயாறு, மசினகுடி, செம்மநத்தம், பூதநத்தம், மாவனல்லா, தொட்டிலிங்கி, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, எப்பநாடு ஆகிய கிராமங்களில் நடந்தது. நேற்று முன்தினம் ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அருளகத்தின் செயலர் பாரதிதாசன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டிலேயே பாறு கழுகுகள் முதுமலை, சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாழ்ந்து வருவது நம் ஊருக்கு பெருமை. மனிதர்களால் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையிலும் இங்கு இருப்பது பாராட்டுக்குரியது. மக்கள் பங்கேற்புடன் இந்த இனத்தை அழிவில் இருந்து மீட்டுச் செழித்து வாழச்செய்ய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பாறு கழுகுகள் ஆற்றிவரும் சூழல் பங்கு பற்றியும், அதன் அழிவுக்கான காரணங்களான வலி மருந்துகள், விஷம் தடவிய சடலங்களால் ஏற்படும் பாதிப்பு, இயற்கையாக இறந்த விலங்குகளை புதைப்பதால் ஏற்படும் இரை தட்டுப்பாடு குறித்து பாடல், நாடகம் மற்றும் மிமிக்ரி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் பிரபு, கலைக்குழு செந்தில், அமிர்தலிங்கம் மற்றும் வனத்துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.