போலீஸ் நிலையம் பற்றிய அச்சம் போக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு


போலீஸ் நிலையம் பற்றிய அச்சம் போக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x

போலீஸ் நிலையம் பற்றிய அச்சம் போக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் அல்லது வேறு நபர்கள் என எவராலும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால், அதனை உடனடியாக வீட்டில் பெற்றோர்களிடமோ, பள்ளியில் ஆசிரியர்களிடமோ தெரிவிக்க வேண்டும். அல்லது 1098 என்ற எண்ணில் போன் செய்தோ, பயமின்றி போலீஸ் நிலையத்திற்கு வந்தோ புகார் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாணவிகளை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, போலீஸ் நிலையத்தில் உள்ள வரவேற்பாளர், சப்-இன்ஸ்பெக்டர், எழுத்தர் மற்றும் அவர்களது பணி பற்றி எடுத்துக்கூறப்பட்டது. போலீஸ் நிலைய அமைப்பு, கைதிகள் அறையின் அமைப்பு, குற்றம் நடைபெறுவது, குற்றம் நடந்தால் குற்றவாளிகளை சிறை வைப்பது, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவது, துப்பாக்கி உள்ளிட்டவை பற்றி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மாணவிகளுக்கான இசை நாற்காலி போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு பயமின்றி வருவதற்காகவே இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story