விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மாவட்டத்தின் மக்கள் அனைவரும் நம் மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் போட்டி நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடந்த இந்த போட்டியானது அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளையங்கோட்டை பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டரங்கை வந்தடையும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆண்களுக்கான போட்டியை இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை பொறுப்பாளர் சரவணமுத்துவும், பெண்களுக்கான போட்டியை கிருஷ்ணா மைன்ஸ் பொது மேலாளர் ரவிசங்கரும் தொடங்கி வைத்தனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியானது ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.4 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. 4 முதல் 50 இடங்கள் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.200 ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story