விபத்து இல்லாத தீபாவளி குறித்து சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான்
சேலத்தில் விபத்து இல்லாத தீபாவளி குறித்து விழிப்புணர்வு மாரத்தான் தீயணைப்பு துறை சார்பில் நடத்தப்பட்டது.
சேலத்தில் விபத்து இல்லாத தீபாவளி குறித்து விழிப்புணர்வு மாரத்தான் தீயணைப்பு துறை சார்பில் நடத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு விபத்து இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் நேற்று சேலத்தில் நடந்தது. சேலம் 4 ரோடு அருகே தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்திற்கு சேலம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பாலகிருஷ்ணன், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமை தாங்கி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
துண்டு பிரசுரங்கள்
இதில் மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம் 4 ரோட்டில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் அண்ணா பூங்கா, கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து விபத்து இல்லாத தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு கூறும் போது,'பட்டாசு வெடிக்கும் போது அனைவரும் எச்சரிக்கையுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பாக ராக்கெட் உள்ளிட்ட பெரிய பட்டாசுகளை குடிசை வீடுகள் உள்ள பகுதியில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால் தீ பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பேனா 'மை' போன்றவற்றை ஊற்றக்கூடாது. விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) விபத்து இல்லாத தீபாவளி குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடக்கிறது.