கிராம மக்களிடையே குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு


கிராம மக்களிடையே குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு
x

குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வினை கிராம மக்களிடையே ஏற்படுத்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் தெரிவித்தார்.

விருதுநகர்


குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வினை கிராம மக்களிடையே ஏற்படுத்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் தெரிவித்தார்.

விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் அருகே உள்ள மருளூத்து பஞ்சாயத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மருளூத்து வாய்ப்பூட்டான் பட்டி, ஒத்த வீடு காலனி ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் குழந்தை திருமணம் ஆங்காங்கே அதிகமாக நடைபெறுகிறது. இதைப்பற்றிய விழிப்புணர்வு கிராம மக்களுக்கு சென்று சேராத நிலை நீடிக்கிறது.

குழந்தை திருமணம்

எனவே முன்னேற விழையும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இம்மாவட்டத்தில் இதை பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களுக்கு சென்று சேர்ப்பதற்காகவே சட்டப்பணிகள் குழுவில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் நாங்கள் இந்த கிராமங்களுக்கு வந்துள்ளோம்.

இனி குழந்தை திருமணம் செய்தால், ஏற்பாடு செய்தோர், கலந்து கொண்ட அனைவருக்கும் தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் பாண்டியராஜா, ஞானவேல் ரமேஷ் ஆகியோர் பேசினர். முகாமில் கிராம மக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம மக்களிடமிருந்து 20 மனுக்களை நீதிபதிகள் பெற்றுக்கொண்டனர். முன்னதாக மருளூத்து பஞ்சாயத்து தலைவர் ஏர்ரையா வரவேற்றார்.


Next Story