நூதன முறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
பழனியில், நூதனமுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பழனி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று நூதன முறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், நகராட்சி பணியாளர்கள் 4 பேர், பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை உடையில் வைத்தும், மாலையாக அணிந்தபடியும், அதேபோல் பயன்படுத்த வேண்டிய மாற்று பொருட்களை அணிந்தும் நகரின் பெரியகடைவீதி, காந்திமார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கையில் அதுகுறித்த அறிவிப்பு பதாகையையும் ஏந்தி சென்றனர். இதை ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் பார்த்தனர்.
இதுகுறித்து நகர்நல அலுவலர் கூறுகையில், பெரும்பாலான மக்களுக்கு பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே தான் மாற்று பொருட்கள் என்னென்ன உள்ளன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தோம். வரும் நாட்களிலும் இதுபோன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.