மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு
கோடங்கிபட்டி ஊராட்சி தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி,
கோடங்கிபட்டி ஊராட்சி தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
துண்டு பிரசுரங்கள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் களத்தில் இறங்கி முயற்சி செய்து வருகின்றனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்கிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று பள்ளியில் உள்ள வசதிகள், கற்றல் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுததி வருகின்றனர். மேலும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:- தொடக்க பள்ளியில் கண்கவர் ஓவியங்களுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.
சிறப்பு பயிற்சி
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். புதிய கற்றல் அணுகுமுறை பயிற்சி, அடிப்படை கணினி பயிற்சி, தமிழ், ஆங்கிலம் கையெழுத்து பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சரளமாக பேச சிறப்பு வகுப்புகள், ஆரோக்கிய மேம்பாட்டிற்கான யோகா மற்றும் உடற்பயிற்சி, உள்ளரங்க விளையாட்டு பயிற்சிகள், மாணவர்களின் மனப்பான்மை மற்றும் மதிப்புகளை மெருகூட்டும் நவீன கல்வி முறை வசதி உள்ளது.
சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் முட்டையுடன் சத்தான மதிய உணவு, இலவச நோட்டு புத்தகங்கள் முதல் சீருடை, காலணி, பேனா, பென்சில் வரை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பணியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சப்னா, ஆசிரிய பயிற்றுநர்கள் சுகந்த லட்சுமி, சுகன்யா, இடைநிலை ஆசிரியை சத்தியா, தலைமை ஆசிரியர் தினகரன் வெண்ணிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.