வால்பாறையில் மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
வால்பாறையில் மனித-வனவிலங்குகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் மனித-வனவிலங்குகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
2 குட்டிகளுடன் சுற்றித்திரியும் சிறுத்தை
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனப் பகுதிகள் உள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, செந்நாய், பாம்புகள் மற்றும் மான்கள் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகளால் அவ்வப்போது மனித -வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த எஸ்டேட் பகுதியில் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் தொடர்ந்து இரவு -பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர்களை சிறுத்தை தாக்கிய தேயிலை தோட்ட பகுதியில் ஒரு சிறுத்தை 2 குட்டிகளுடன் சுற்றித்திரிந்து வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
இதனைத் தொடர்ந்து வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் ரோந்து பணியில் ஈடுபட்டும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.சிறுத்தை ஒன்று இரண்டு குட்டிகளுடன் நடமாடுவதை வனத் துறையினரும் எஸ்டேட் பகுதி மக்களும் பார்த்துள்ளனர்.இதே போல் பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாடுவதை வனத் துறையினர் கடந்த சில நாட்களாக பார்த்து வருகின்றனர்.
தற்போது சிறுத்தைகள் குட்டி போடும் பருவம் என்பதால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் பகலிலும் இரவிலும் சிறுத்தைகள் அதிகளவில் நடமாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து வனச்சரகர் வெங்கடேஷ் மேற்பார்வையில் வனவர் கணேஷ் தலைமையில் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய தேயிலை தோட்டத்திற்கே சென்று தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தேயிலை தோட்ட பகுதிக்கு வேலைக்கு செல்வதற்கு முன் தேயிலை செடிகளுக்குள் வனவிலங்குகள் குறிப்பாக சிறுத்தைகள் ஏதாவது பதுங்கியுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப வேண்டும்.தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய வனப் பகுதிக்குள் விறகுகள் எடுக்கச் செல்வது, தேயிலை தோட்ட பகுதிக்கு அருகில் உள்ள நீரோடைகளுக்கு செல்வது, குழந்தைகளை தேயிலை தோட்ட பகுதியை ஒட்டிய இடங்களில் விளையாடுவதற்கு அனுமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வனத் துறையினர் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.