தென்னையில் பூச்சி-நோய் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
தென்னையில் பூச்சி-நோய் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அன்னவாசல்:
அன்னவாசல் வட்டாரம் முத்துக்காடு கிராமத்தில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் பழனியப்பா தலைமை தாங்கினார். முகாமில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தகுமார், வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் கவிதா மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை எடுத்து கூறினர். மேலும், தென்னையில் சமீபகாலமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈக்கள், இருந்தலைப் புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு மற்றும் தஞ்சாவூர் வேர்வாம் போன்ற பூச்சி மற்றும் நோய்களால் சேதம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூகோஸ் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்படுகிறது. தற்போது கோடைகால வெப்பநிலை உள்ளதால் இந்த வெள்ளை ஈக்களின் பரவல் அதிகரித்து விடுகிறது. தென்னை ஓலையின் அடிப்புறத்தில் இந்த ஈக்கள் முட்டையிட்டு பரவத்தொடங்கி, ஓலை முழுவதும் கரும்பூஞ்சாணம் படர்ந்து காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை மரங்களுக்கு இடையே எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், தெளிப்பான்கள் மூலம் தண்ணீரைத் தெளித்து கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. மேலும் கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்தும் முறையினை விளக்கியதுடன், எருகுழியில் மெட்டாரைசியம் பூஞ்சாணத்தைக் கொண்டு காண்டாமிருக வண்டுகளின் புழுக்களை கட்டுப்படுத்தும் செயல் விளக்கத்தினை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். இதில் வேளாண்மை அலுவலர் கவுசல்யா, உதவி வேளாண்மை அலுவலர் பாஸ்கர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.