விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
x

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டியில், நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசுகையில், நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் ஊராட்சி அலுவலகம், வட்டார வளமையம், கிராம நிர்வாக அலுவலகம் உள்பட 2 ஆயிரத்து 536 அரசு கட்டிடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 306 கிராம ஊராட்சிகளில் உள்ள 3 ஆயிரத்து 84 கிராமங்களில் 2 ஆயிரத்து 530 இடங்களில் அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

அதையடுத்து குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மஞ்சள் பைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், மலரவன், தூய்மை பாரதம் இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநிதி, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story