மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேந்தமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பாலியல் கொடுமையினை தவிர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சேந்தமங்கலம் போலீசார் நடத்தினர். நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் பேசும்போது, பள்ளியில் படிக்கும் மாணவிகள் வகுப்பு நேரம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது யாரிடமும் அனாவசியமாக பேசக்கூடாது, எந்த ஒரு உதவியும் எதிர்பார்க்கக் கூடாது, பாலியல் கொடுமையில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பேசினார். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் சிலம்பாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது பாலியல் கொடுமை குறித்து சில மாணவிகள் பாடலாக பாடினர். மேலும் ஏழைக் குழந்தைகள் பொழுதுபோக்கும் விதமாக போலீசார் மனமகிழ் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதை யடுத்து சிலம்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவிகளுக்கு போலீசார் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.