பள்ளி, கல்லூரிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி


பள்ளி, கல்லூரிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

"நம்ம ஊரு சூப்பரு" என்ற இயக்கத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் திடக்கழிவு குறித்த மேலாண்மை நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

ஒருங்கிணைப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் "நம்ம ஊரு சூப்பரு" என்ற சுகாதார விழிப்புணர்வு இயக்கத்தினை செயல்படுத்துவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"நம்ம ஊரு சூப்பரு" நாம் ஒன்றிணைவோம், பசுமையும் தூய்மையும் நமதாக்குவோம் என்ற இயக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இவ்வியக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து முனைப்புடன் செயல்படுத்திடும் விதமாக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

பசுமையான கிராமங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகள், 19 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளிலும், முதல் நிலையில் பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை பெருமளவில் சுத்தம் செய்திடவும், இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் துப்புரவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு, சுகாதாரம் மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல் போன்றவை செய்திட வேண்டும்.

4-ம் நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல், ஐந்தாம் நிலையில், வருகிற 29-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல், ஆறாம் நிலையில் ஜூன் மாதம் 5-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீர், சுகாதாரம் மற்றும் திட, திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும்.

தூய்மை பணிகள்

இதன் மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரம், பிளாஸ்டிக் பயன்பாடற்ற பகுதியாக மாற்றுதல், தண்ணீரை மாசுபடாமல் பாதுகாத்தல், சுற்றுப்புற தூய்மை ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திட வேண்டும். மேலும் "நம்ம ஊரு சூப்பரு" என்ற இயக்கத்தின் மூலம் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விழிப்புணர்வு பணிகள் அனைத்து பொதுமக்களை சென்றடைவதை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த சுகாதார நிகழ்ச்சியினை அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story