போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூரில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ கலந்துகொண்டார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் போது போதைப்பொருட்கள் மற்றும் கள்ளசாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பேசுகையில், போதைப்பழக்கத்தால் தீயவிளைவுகளை முழுமையாக அறிந்து கொண்ட பின்னரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அதேபோன்று போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகமுக்கியமானது.
தடுப்பு நடவடிக்கை
போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கள்ளசாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (கலால்) அழகிரிசாமி, நகராட்சி மேலாளர் முத்துகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.