போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். போலீஸ் கமிஷனர் காமினி, உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு) மீனாட்சி, ஆவின் பொதுமேலாளர் முத்துமாரி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர் ஜேம்ஸ்பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியர் சதீஷ்ஞானபிரகாசம் வரவேற்றார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேரலையில் மாணவர்கள் முன்தோன்றி போதைப்பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை கூற அவரை பின்தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். போதைக்கு எதிராக பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுடர் ஏந்தி வந்து வழங்க, அதனை மாவட்ட கலெக்டர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த 8 பேருக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போதை பழக்கத்துக்கு எதிரான கருத்துருவை வழங்கிய சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுழற்கேடயமும், சுடர் ஏந்தி வந்த கேம்பியன் பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது. முடிவில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சற்குணன் நன்றி கூறினார்.