அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


பிளஸ்-2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் உயர்கல்வி பெற உதவும் வகையில் வங்கிக்கடன் வழங்க ஆலோசனையும், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாமும் நடந்தது.

திருவண்ணாமலை

பிளஸ்-2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் உயர்கல்வி பெற உதவும் வகையில் வங்கிக்கடன் வழங்க ஆலோசனையும், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாமும் நடந்தது.

பிளஸ்-2 மாணவர்கள்

2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியினைத் தொடரும் வகையில் தமிழக முதல்- அமைச்சர் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் "நான் முதல்வன் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற் கட்டமாக திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஆகிய 6 ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி முன்னிலை வகித்து உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார்.

சாதிச்சான்றிதழ்

மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தனகீர்த்தி வரவேற்றார். இந்த முகாமில் 1,239 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ. குறுகிய காலப் பயிற்சிகள் சார்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வருவாய் துறையின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, வருமானச்சான்று மற்றும் இதர சான்றுகள் பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மேலும் வங்கிகளின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான கல்வி கடன் பெறுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மஞ்சுளா, முன்னோடி வங்கி மண்டல மேலாளர் கவுரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மலர்விழி செய்திருந்தார். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் நன்றி கூறினார்.


Next Story