குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குறுக்குச்சாலையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குறுக்குச்சாலையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதனை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் டி.சுதா தனராணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அபராதம்
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் பேசும் போது, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ, 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் அது குறித்த விவரத்தை குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098-க்கோ, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்துக்கு 0461-2340443 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.