தேனியில் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


தேனியில் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தேனியில் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தீவிர தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தூய்மை பணியை நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தலைமை தாங்கி தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். முகாமுக்கு நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணியை மேற்கொண்டனர். பஸ் நிலைய சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றியதோடு, சுவற்றில் வெள்ளையடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்.

பணிகளை சிறப்பாக செய்ய அவர் அறிவுரைகள் வழங்கினார். ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமையில் இதுபோன்ற தீவிர தூய்மை பணி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம் ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story