மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை


மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்  கலெக்டர் மோகன் அறிவுரை
x

மாணவர்கள் தங்களது வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்


விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'என் குப்பை - என் பொறுப்பு" என்ற தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் பேசியதாவது:-

கடந்த ஓராண்டு காலமாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் தூய்மையை பாதுகாத்திடும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்காத பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்திடவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் நகராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக 'என் குப்பை - என் பொறுப்பு" என்ற நிலையை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவர்களின் விடாமுயற்சி

மேலும் மாணவ- மாணவிகளிடையே தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதன் நோக்கம் என்னவென்றால் நீங்கள் படிக்கும் பள்ளியையும், உங்களது வீட்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள நீங்கள் பணியாற்றுவதுடன் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடமும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்துவீர்கள் என்பதன் அடிப்படையிலேயே உங்களிடமிருந்து இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் யாரேனும் அனாவசியமாக குப்பைகளை போட்டால் அவர்களிடத்தில் ஏன் குப்பையை போடுகிறீர்கள் என்று மாணவ- மாணவிகள் தைரியமாக கேட்கலாம்.

சுற்றுப்புற தூய்மையே சுகாதாரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகைய சுகாதாரத்தை மாணவர்களின் விடாமுயற்சியால் 100 சதவீதம் அடைந்திட முடியும். எனவே ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் தங்கள் பள்ளியை சுகாதாரமாக வைத்துக்கொள்ள முழு முயற்சியுடன் செயல்படுவதுடன் தங்கள் கல்வியை சிறப்பான முறையில் பயின்று இப்பள்ளி இனிவரும் காலங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் அனைவரும் நன்கு கல்வி பயின்று வாழ்க்கையில் நல்லதொரு நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கலெக்டர் முன்னிலையில் மாணவிகள் தூய்மைப்பணி குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் தூய்மையின் அவசியம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஓவிய சங்கங்களின் மூலம் பஸ் நிலைய சுவர்களில் தூய்மையை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையப்பட்டது. அதில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ- மாணவிகள், ஓவிய சங்கங்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ், மரக்கன்றுகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

இதில் விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story