சில்வர் பீச்சை தூய்மையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூரில் சில்வர் பீச்சை தூய்மையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலூர்,
கடலூர் சில்வர் பீச்சை தூய்மையாக பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், சுற்றுலா தலமாக விளங்கும் கடலூர் சில்வர் பீச்சுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதனால் சில்வர் பீச்சில் மணல் பரப்பில் குப்பைகள் கொட்டுவதை தவிர்த்து, தூய்மையாக பராமரிக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நடைபாதை வியாபாரிகள் அனைவரும், கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் நல்லமுறையில் பழக வேண்டும். ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால், அதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, தேவனாம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் மற்றும் நடைபாதை வியாபாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.