மண் மாதிரி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேமங்கலம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேமங்கலம் கிராமத்தில் கீழ்வேளூர், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன படுத்துதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கி பேசுகையில், மண் வளத்தைக் காக்க மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட வேண்டும். யூரியாவை இலை வண்ண அட்டை அடிப்படையில் நெற்பயிர்களுக்கு சரியான அளவாக இடவேண்டும். நெற்பயிருக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை கடைபிடிக்க வேண்டும். இதற்கு தொழு உரம், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், உயிர் உரம், நுண்ணுட்டச்சத்து மற்றும் மண் பரிசோதனையின் அடிப்படையில் ரசாயன உரங்கள் இடுவதால் மண்வளம் காக்கப்பட்டு நெற்பயிர் உற்பத்தி அதிகரிக்கும் என்றார். பின்னர் விவசாயிகளின் வயல்களில் இருந்து மண் மாதிரி சேகரிப்பு முறைகள் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் அழகேசன், அனுராதா, அகிலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.