குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சியில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சியில் தூய்மை நகராட்சிகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் குமரன், நகரமன்ற துணைதலைவர் ஷமீம்பானுஅப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வ.உ.சி நகர், விளாந்தாங்கல்ரோடு, நான்குமுனை சந்திப்பு, ஏமப்பேர், கருணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று அங்கிருந்த பொது மக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து தனித்தனியாக வழங்குவது குறித்த செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அலங்கார வாகனத்தின் மூலம் இளைஞர்கள் கானா பாடல் பாடி பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகரமைப்பு அலுவலர் தாமரைசெல்வன், துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், மேற்பார்வையாளர் முகமதுசுபேர், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.