விழிப்புணர்வு பேரணி
உடல் உறுப்பு தான உறுதி மொழி ஏற்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகரில் இந்திய மருத்துவர் சங்க விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் உடல் உறுப்பு தான உறுதி மொழி ஏற்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை விருதுநகர் கே.வி.எஸ். நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் பற்றியும் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பின்னர் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அனைவரும் உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. இதில் விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி, இந்திய மருத்துவர் சங்க விருதுநகர் மாவட்ட கிளை தலைவர் டாக்டர் ராமசாமி, நிர்வாகிகள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.