பிரிதிவிமங்கலத்தில் நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்
பிரிதிவிமங்கலத்தில் நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
தியாகதுருகம்,
நம்ம ஊரு சூப்பரு இயக்கம்
தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் ஆணைக்கிணங்க நம்ம ஊரு சூப்பரு இயக்க திட்டத்தின் கீழ் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.
விழிப்புணர்வு பேரணி
அதன்படி பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் வசிக்கின்ற மக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது போல், தாங்கள் வசிக்கும் தெருக்களையும் ஊராட்சியையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு பேரணியையும் கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், அவற்றுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக கழிவுகளை பிரித்தெடுக்கும் எந்திரம் மறுசுழற்சி செய்யும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.