விக்கிரவாண்டி, வல்லம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி
விக்கிரவாண்டி, வல்லம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விக்கிரவாண்டி,
விழிப்புணர்வு பேரணி
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் உதவி திட்ட அலுவலர் தனவேல், வட்டார கல்வி அலுவலர் கவிதா, துணைத் தலைவர் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஜே.ஆர்.சி. இணை கன்வீனர் தமிழழகன், கவுன்சிலர் ரேவதி, வளமைய மேற்பார்வையாளர் உமாதேவி, ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசி, ஆனி அருள்ஜாய்சி, உடல் இயக்க மருத்துவர் மாணிக்க ராஜா, இருதயராஜ் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்கவேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பனமலைப்பேட்டை
இதேபோல் விக்கிரவாண்டி அடுத்த பனமலைப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் வெங்கடேச குமார் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியின்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி, காணை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் அனிதா, எழிலரசி, கெஜலட்சுமி, கோபாலகிருஷ்ணன், மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு ஆசிரியர்கள் லியோனி, சவுந்தர்ராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியை லதா ஆகியோர் உடன் சென்றனர்.
வல்லம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வல்லம் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி வல்லத்தில் நடைபெற்றது. இதற்கு வல்லம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி முத்து மங்கை தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் விநாயகமூர்த்தி, சித்ரா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி லட்சுமணன் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாரதி, இயன்முறை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, கண் மருத்துவர் தாமரைச்செல்வி, சுகாதார ஆய்வாளர் உதயநிதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.