தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
மதுரையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் போலி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மதுரை மாவட்ட அலுவலர் வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது, காந்தி மியூசியத்தில் தொடங்கி கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை சென்றடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி, சுரேஷ்கண்ணன் மற்றும் தல்லாகுளம், அனுப்பானடி, திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை சார்ந்த நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.