பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்
விழுப்புரம்
செயல்திட்ட கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மாவட்ட அளவிலான செயல்திட்ட கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறதி செய்யவும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு இத்திட்டத்திற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதிசெய்து அவர்களின் பிறப்பை போற்றுதல், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், அவர்களது கல்வியை மேம்படுத்துதல், பெண் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கவும், கல்வி, வேலைவாய்ப்பினை தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும் ஊக்குவித்தல், பெண்களுக்கு பாதுகாப்பான, வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
குழந்தை பாலின விகிதம் குறைவதால் எதிர்காலத்தில் சமுதாயத்தில் நற்பண்புகள் குறைதல், பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்தல், பெண் குழந்தைகள் கடத்தப்படுதல், ஆணிற்கு திருமணத்தின்போது பெண் கிடைக்காத நிலை ஏற்படுதல், ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் நிலை ஏற்படுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். குழந்தை திருமண தடைச்சட்டத்தின்படி பெண் குழந்தைக்கு 18 வயதிற்குள் திருமணம் நடத்தி வைத்தால் 2 வருட சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும், கர்ப்பிணியை பாலினம் கண்டறிதலுக்கு உட்படுத்தினால் கணவர் அல்லது உறவினருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், குழந்தைக்கு பாலியல் ரீதியான தொந்தரவு, பாலியல் உறவுக்கு உட்படுத்தினால் குற்றத்திற்கு ஏற்றவாறு 5 ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கப்படும்.
விழிப்புணர்வு
எனவே பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.