சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு


சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரிப்பட்டி அரசு பள்ளி சார்பில் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

ஏரிப்பட்டி அரசு பள்ளி சார்பில் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நோட்டீசு வினியோகம்

உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் சிட்டுக்குருவிகளுக்கு கொஞ்சம் நீர் வையுங்க என்ற விழிப்புணர்வு நோட்டீசை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பின்னர் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், ஆசிரியை கீதா ஆகியோர் பேசும்போது கூறியதாவது:-

மனிதனின் பழக்க வழக்கங்களால் ஏற்பட்ட மாறுபாடும், சுற்றுச்சூழல் மாறுபாடும் சிட்டுக்குருவிகள் இனத்தை அழித்துக் கொண்டு வருகின்றன. எரிவாயுக்களில் இருந்து வெளிவரும் மெத்தில் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் வெளிப்பட்டு பூச்சி இனங்கள் அழிக்கப்பட்டு குருவிகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதில்லை. தொலைபேசி குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைத்து விடுகிறது. இதனால் முட்டை இட்டாலும் கரு வளர்ச்சி அடைவது இல்லை.

தாகம் தீர்க்க வேண்டும்

இதற்கு முன்பு சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப கூரை வீடுகள் இருந்தன. தற்போது கான்கீரிட் வீடுகளாக மாறி போனதால், அவற்றில் குருவி கூடு கட்டுவது சாத்தியம் இல்லாத நிலை உள்ளது. தற்போது கோடை வெயிலினால் தண்ணீரை தேடி காகம், குருவி, கிளி போன்ற பறவைகள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன. தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அவை மடிந்து போகக்கூடும். எனவே, வீட்டின் மொட்டை மாடியில் சிறிய குவளையில் நிழலான இடத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்க்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொதுமக்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் சிட்டுக்குருவி தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story