மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி


மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
x

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி 3 இடங்களில் நடந்தது. சங்குபேட்டையில் உள்ள பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) நடந்த பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்து பேசினார். பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார், உள்ளடக்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர் உமா மகேஸ்வரி பேசுகையில், குழந்தை பிறந்தவுடன் ஆரம்ப காலத்திலேயே அடையாளம் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக 5 வயதில் மற்ற குழந்தைகளை போல் அவர்களாலும் பள்ளி செல்ல இயலும், என்றார். உள்ளடக்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பேசுகையில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பள்ளி மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்திற்கு அழைத்து வர போக்குவரத்து பயணப்படி, வழித்துணையாளர் படி, பெண் கல்வி ஊக்கத்தொகை போன்றவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இயன்முறை மருத்துவர் குமரேசன் பேசுகையில், குழந்தைகளை எவ்வாறு தூக்கி வர வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கத்துடன் எடுத்து கூறினார். அரசு தலைமை மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் ஜூலி, சிறப்பு பயிற்றுனர்கள் துர்கா, மகேஸ்வரி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

இதேபோல் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாசிரியர்கள் ராணி பரிமளா, ரூபி, செவிலியர் ஜெசிந்தா மற்றும் லாடபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாசிரியர்கள் மரகதவள்ளி, தனவேல், செவிலியர் சரோஜா ஆகியோர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியை வழங்கினர். பயிற்சியில் 120 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் 30 அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.


Next Story