பணகுடி அருகே பரிதாபம்; காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி
பணகுடி அருகே விளையாடியபோது காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பணகுடி:
பணகுடி அருகே விளையாடியபோது காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3 குழந்தைகள்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். பொக்லைன் டிரைவர். இவருக்கு நித்திஷா (வயது 6) என்ற மகளும், நித்திஷ் (4) என்ற மகனும் உண்டு. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் சுதன் என்பவரின் மகன் கபிசாந்த் (4).
நாகராஜனின் வீடு அருகே அவரது அண்ணன் மணிகண்டனின் கார் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த காரை எப்போதாவது இயக்குவது வழக்கம். இந்த காரின் வெளியே அமர்ந்து தான் நித்திஷா, நித்திஷ் ஆகியோர் வழக்கமாக சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
காருக்குள் சென்றனர்
நேற்று மதியம் குழந்தைகள் நித்திஷா, நித்திஷ், கபிசாந்த் ஆகியோர் காரில் விளையாட சென்றனர். 3 கதவுகள் மூடப்பட்டு இருந்தது. ஒரு கதவு மட்டுேம திறந்து இருந்தது. அந்த கதவின் வழியாக 3 குழந்தைகளும் காருக்குள் சென்றனர்.
அப்போது, அந்த கதவும் எதிர்பாராதவிதமாக மூடியதாக கூறப்படுகிறது. இதை அறியாத குழந்தைகள் காருக்குள் விளையாடினார்கள்.
மூச்சுத்திணறி மயங்கினர்
அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காருக்குள் இருந்த குழந்தைகள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். கதவுகளை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி 3 குழந்தைகளும் அடுத்தடுத்து மயங்கி காருக்குள் விழுந்தனர்.
இதற்கிடையே, குழந்தைகளை வெகு நேரம் ஆகியும் காணாததால் பெற்றோர்கள் வெளியே வந்து தேடினார்கள். ஆனால், குழந்தைகள் எங்கும் இல்லை. இதனால் அவர்கள் கலக்கம் அடைந்தனர். இறுதியாக காரில் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு 3 குழந்தைகளும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பரிதாப சாவு
உடனடியாக காரின் கதவை திறந்து பார்த்தனர். 3 குழந்தைகளும் பேச்சு மூச்சு இன்றி கிடந்தனர். உடனடியாக 3 குழந்தைகளையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரியில் குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தைகளின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் 3 குழந்தைகளின் உடல்களும் வெப்பத்தால் ஆங்காங்கே வெந்துபோய் இருந்தது.
சபாநாயகர் ஆறுதல்
தனது சொந்த ஊரில் நடந்த இந்த சோக சம்பவம் குறித்து தகவல் அறிந்த சபாநாயகர் அப்பாவு பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு ெசன்று, பலியான குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல் ஞானதிரவியம் எம்.பி.யும் ஆறுதல் கூறினார்.
மேலும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்ெகாண்டனர்.
பணகுடி அருகே விளையாடியபோது காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.