அய்யனார் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு


அய்யனார் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்டு   கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

இலுப்பூர் அருகே அய்யனார் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

கோவில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா புதூர் கிராமத்தில் வெற்றி கொண்ட அய்யனார், அடைக்கலம் காத்தார், கருப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் புதூர், குலவாய்பட்டி, காட்டுப்பட்டி, புதூர் காலனி உள்ளிட்ட கிராம மக்களின் முயற்சியால் இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த கோவிலில் கடந்த 30-ந் தேதி தொடங்கிய திருவிழா வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை நடத்தவிடாமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மேலும் ஊருக்குள் கலவரம் ஏற்படுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் திரண்டு வந்தனர்

இந்த நிலையில் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கோரி கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் வருகை முன்கூட்டியே போலீசாருக்கு தெரிந்ததால் உடனடியாக டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), ரமேஷ் (திருக்கோகர்ணம்) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் அனைவரையும் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். புதூர் மிராசுதாரர் சுப்பையா தலைமையில் பூசாரிகள் உள்பட குறிப்பிட்ட சிலர் மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்புக்கு உறுதி

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேலுவிடம் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். இதையடுத்து திருவிழா நடத்த தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் அறிவித்த போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் கைத்தட்டியும், கையெடுத்து கூம்பிட்டும் அதிகாரிகள், போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். சில பெண்கள் குலவையிட்டு மகிழ்ச்சியில் நடனமாடினர்.


Related Tags :
Next Story