வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா: சாமி சிலைகளுடன் 5 கி.மீ. தூரம் கிராம மக்கள் ஊர்வலம்


வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா: சாமி சிலைகளுடன் 5 கி.மீ. தூரம் கிராம மக்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Oct 2023 8:00 PM GMT (Updated: 13 Oct 2023 8:01 PM GMT)

வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி சாமி சிலைகளுடன் 5 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

மதுரை

வாடிப்பட்டி

அய்யனார் கோவில்

மாறிவரும் காலமாற்றத்தால் பழமையினை மறந்து பண்பாட்டை மீறி எத்தனையோ செயல்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது நடைப்பழக்கத்தை மறந்து வாகனங்களில் செல்லும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

ஆனால் முன்னோர்கள் வகுத்த வழியில் பழமையும் பண்பாடும் மாறாமல் உடல் நலம், மனநலத்தை காக்கும் விதத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று இன்றும் தொடர்ந்து வழிபாடு செய்யும் பழக்கத்தை மதுரை அருகே உள்ள கிராம மக்கள் கடைபிடித்து வருவது வியப்பாக உள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 10-வது வார்டு போடிநாயக்கன்பட்டியில் அய்யனார்கோவிலில் புரட்டாசி மாத உற்சவ திருவிழாவில் அது நடந்தது.

சாமி சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம்

இந்த திருவிழாவையொட்டி போடிநாயக்கன்பட்டி மந்தையில் உள்ள அய்யனார்பீடம் மற்றும் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் இருந்து காவல்தெய்வம் கருப்புசாமி, லாடசன்னாசி, கன்னிமார்கள், புரவி சிலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சுமந்து சென்றனர்.

இவர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக 5 கி.மீ. தூரம் உள்ள விராலிப்பட்டி சிறுமலையடிவார கண்மாய்கரையில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அங்குள்ள அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதன் பூஜைகளை பூசாரி பாலு ராஜேந்திரன் செய்திருந்தார். இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை போடிநாயக்கன்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story