மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்


மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
x

மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

தஞ்சாவூர்

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி தஞ்சையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

மண்டல பூஜை-மகர விளக்கு தரிசனம்

கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் செல்வார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.

கார்த்திகை 1-ந் தேதி

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மகரவிளக்கு பூஜைக்காக அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி நடை திறக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.இதை முன்னிட்டு கார்த்திகை 1-ந் தேதியான நேற்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் வீடுகள், நீர்நிலைகளில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

தஞ்சையிலும் நேற்று அதிகாலை அய்யப்ப பக்தர்கள் திரளானோர் வீடுகள், நீர் நிலைகளில் நீராடி விட்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து சுவாமியே சரணம் அய்யப்பா என கோஷமிட்டு தங்களது விரதத்தை தொடங்கினர். அதன்படி தஞ்சையை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலிலும், யாகப்பா நகரில் உள்ள அய்யப்பன் கோவில், மேலவஸ்தாசாவடியில் உள்ள தான் தோன்றியம்மன் கோவில், தஞ்சை சிவா-விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அய்யப்ப பக்தர்கள் அதிகாலை முதலே வரத்தொடங்கினர்.

சரண கோஷங்கள்

பின்னர் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். இதனால் தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் கருப்பு, காவி மற்றும் நீல உடைகளுடன், பக்தர்களின் சரண கோஷங்கள் ஒலித்து கொண்டே இருந்தது. இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பிருந்தே கடைகளில் துளசிமாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை நடந்தது.

இது தவிர கருப்பு, நீலம், காவி கலர் துண்டுகள், வேட்டிகள் விற்பனையும் அதிகரித்தது. மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story