ஆழியாறு காட்சிமுனை மாடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆழியாறு காட்சிமுனை மாடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆழியாறு காட்சிமுனை மாடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்சிமுனை மாடம்
மலைப்பிரதேசமான வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கிவிட்டது.அவர்கள்ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் 16 கொண்டை ஊசி வளைவுகளில் பயணம் செய்கின்றனர். அங்கு9-வது கொண்டை ஊசி வளைவில் ஆழியாறு அணை, தென்னந்தோப்புகளை உள்ளடக்கிய இயற்கை காட்சிகளை காண முடியும். இதை ரசித்து செல்ல ஆழியாறு காட்சி முனை மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.
வரையாடுகளுக்கு தொந்தரவு
இதற்கிடையில்அங்குள்ள பாறைகளில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் வாழ்ந்து வருகின்றன. அவற்றை வனத்துறையின் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதால் வனத்துறையினர் ஆழியாறு காட்சி முனை மாடத்தை கடந்த 2 ஆண்டுகளாக மூடி வைத்துள்ளனர். இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாத நிலை உள்ளது.
வேறு இடத்துக்கு...
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
9-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு பதிலாக வரையாடுகள் நடமாட்டம் இல்லாத வேறு கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு ஆழியாறு காட்சி முனை மாடத்தை அமைத்து தர வேண்டும். வரையாடுகளை தொந்தரவு செய்வதாக கூறி காட்சிமுனை மாடத்தை வனத்துறையினர் மூடி வைத்துள்ளனர். இதனால் அங்கு வாகனத்தை நிறுத்தி இயற்கை காட்சிகளை ரசிக்க முடிவது இல்லை.இது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.