குடியிருப்புகளில் உலா வந்த பாகுபலி யானை
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புகளில் உலா வந்த பாகுபலி யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை அடிவார பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சமயபுரம் கிராமம் உள்ளது. உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்று, அங்குள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக சமயபுரம் பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டத்தை காண முடியவில்லை. வனப்பகுதியில் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சமயபுரம் பகுதியில் பாகுபலி யானையின் நடமாட்டத்தை காண முடிந்தது. நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்று மறைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.