பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை-அதிகாரிகள் எச்சரிக்கை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தில் (பி.ஏ.பி.) கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. விவசாயிகள் நலன் கருதி 4 மண்டலங்களாக தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சுமார் 15 ஆயிரத்து 600 ஏக்கர் விளைநிலம் பி.ஏ.பி.பாசனத் திட்டத்தில் பயன் அடைகிறது. இந்த பாசன நீரைக் கொண்டு தென்னை மற்றும் காய்கறி பயிர்கள், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. இந்நிலையில், சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதிகளில் பி.ஏ.பி.வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க கோவை மாவட்ட பி.ஏ.பி. கூட்டுகண்காணிப்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திருடப்படுகிறதா? என கடந்த சில மாதங்களாக அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடும் நடவடிக்கை
ஆய்வில், வாய்க்காலில் இருந்து முறைகேடாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனால் வணிக மின் இணைப்புகள் மற்றும் விவசாய மின் இணைப்புகள் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தண்ணீர் திருட்டு தொடர்பாக அதிகாரிகள் பிடி தொடர்ந்து இறுகி வருவதால் முறைகேடாக தண்ணீர் திருடி விற்பனை செய்பவர்கள் மற்றும் பாசனம் செய்பவர்கள், முறைகேடாக தண்ணீர் திருடும் தொழிற்சாலையினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதாவது:- பரம்பிக்குளம்-ஆழியார் பாசன திட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்போது தண்ணீர்திருட்டை தடுக்க தொடர்ந்து ரோந்து, ஆய்வு நடத்தப்படும். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டு சிக்குபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, யாரும் முறைகேடாக தண்ணீர் திருட்டில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.